யோனி இறுக்கம் : பெண்களில் வலிமிகுந்த உடலுறவைப் புரிந்துகொள்ளல் | The Family Planning Association of Sri Lanka

யோனி இறுக்கம் : பெண்களில் வலிமிகுந்த உடலுறவைப் புரிந்துகொள்ளல்

வலிமிகுந்த உடலுறவு என்பது பெண்களால் அனுபவிக்கப்படும் ஒரு பொதுவான அறிகுறியாகும், மேலும் இது பெண் பாலியல் நாட்டம் இழப்பதற்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். இது பொதுவாக யோனி தசைச்சுருக்கம்/ அல்குல் தசைச்சுருக்கம் எனப்படும் ஒரு நிலை காரணமாக ஏற்படுகிறது, இங்கு யோனியைச் சுற்றியுள்ள இடுப்புத் தள தசைகள் விருப்பமின்றி சுருங்குவதால் இந்நிலை ஏற்படுகிறது. இதனால் உடலுறவின் போது யோனியில் ஆண்குறி செலுத்துவது மிகவும் வேதனையளிப்பதோடு சில நேரங்களில் சாத்தியமற்றதாகிறது. இது ஒரு டேம்போன் (பஞ்சுத்தக்கை) அல்லது மாதவிடாய் கோப்பையை செருகும் போது, ​​மற்றும் சுகாதார பணியாளர்களின் யோனி பரிசோதனையின் போது கூட ஏற்படலாம்.

 

பெண்ணின் பாலியல் சுகாதாரத்தைச் சுற்றியுள்ள களங்கம் காரணமாக, பல பெண்கள் இது போன்ற நிலைகளில் மௌனமாக அவதிப்படுகிறார்கள். மேலும் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை அடைவதைத் தடுக்கிறார்கள். இது உணர்ச்சி சிக்கல்களை ஏற்படுத்துவதோடு தனிப்பட்ட உறவுகளையும் சிதைக்கும்.

 

யோனி இறுக்கம் உள்ள பெண்கள் குறைந்த பாலுணர்வு உந்தல், யோனி வறட்சி, உடலுறவில் தூண்டுதலாக மாற இயலாமை மற்றும் உறவுகளில் இறுக்கம் போன்றவற்றையும் அனுபவிக்கலாம். இந்நிலைப்பாடு தன்னைப்பற்றிய தாழ்வான எண்ணத்தை உருவாக்குவதோடு, மனச்சோர்வு மற்றும் பிற மனநலம் சார் நிலைமைகளையும் ஏற்படுத்தும்.

 

யோனி இறுக்கத்திற்கான காரணங்கள் மாறுபடக்கூடியவை, ஆனால் முக்கியமாக உளவியல் காரணிகள், உடல் நிலைமைகள் அல்லது இவ்விரண்டின் கலவையுமே காரணமாக காணப்படும். பெண்கள் ஒருபோதும் வலியற்ற உடலுறவை கொண்டிருக்க முடியாதிருத்தல் (யோனி இறுக்கத்தின் முதன்மை நிலை)  அல்லது முன்னர் வலியற்ற உடலுறவு கொண்ட ஒரு பெண்ணில் தற்போது இந்நிலை உருவாகலாம் (யோனி இறுக்கத்தின் இரண்டாம் நிலை).

 

யோனி இறுக்க நிலையில் உளவியல் காரணிகள் எப்போதும் காணப்படும். அவற்றில் பின்வருமகாராணிகள் உள்ளடங்கும் 

 

  • கவலை (உடலுறவு பற்றிய கவலை உட்பட)
  • உடலுறவு கொள்ளவதற்கான பயம் 
  • கடந்தகால அதிர்ச்சி (சிறுவயது  துஷ்பிரயோகம் உட்பட)
  • எதிர்மறையான பாலியல் அனுபவங்கள் (பாலியல் தாக்குதல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறையின் பிற வடிவங்கள் உட்பட)
  • மனச்சோர்வு அல்லது குறிப்பிடத்தக்க மன அழுத்தம் போன்ற தற்போதைய உளவியல் நிலைமைகள்
  • இறுக்கமான உறவு / திருமண பிரச்சினைகள்

 

உடலுறவு பற்றிய கவலை மற்றும் பயம் ஆகிய இரண்டும் பாலியல் செயல்பாடு குறித்த, குறிப்பாக பெண் குழந்தை மீதான தலைமுறை ரீதியிலான எதிர்மறையான அணுகுமுறையிலிருந்து உருவாகலாம். தெற்காசிய கலாச்சாரங்களில், பெண்கள் பொதுவாக எதிர் பாலினத்துடனான எந்தவொரு தொடர்பிற்கும் (குறிப்பாக பாலியல் தொடர்பு)  ஊக்கமளிக்கவில்லை.மேலும் இது பாலியல் செயல்பாடு குறித்த பயத்தையும் ஏற்படுத்தலாம்.

 

உடலியல் காரணங்களில் பின்வருவன அடங்கும்:

 

  • பிறப்புறுப்பு வறட்சி - மாதவிடாய் நின்ற பின், பிரசவத்திற்குப் பின், நீரிழிவு நோய் அல்லது முதுகுத் தண்டு நோயால் கூட ஏற்படலாம்.
  • இனப்பெருக்க பாதையிலுள்ள பிறவி குறைபாடுகள்
  • பிறப்புறுப்பு பகுதியில் தொற்று 
  • இனப்பெருக்க பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகள்
  • இடுப்பு பகுதியில் செய்யப்படும் கதிரியக்க சிகிச்சை

 

 

யோனி இறுக்கத்தினை கண்டறிவதற்காக, மருத்துவர் உங்கள் பாலியல் வரலாறு உட்பட விரிவான கேள்விகளைக் கேட்பார், மேலும் ஏதேனும் அடிப்படை உடல் காரணங்களைக் கண்டறிய பிறப்புறுப்பு பரிசோதனையையும் செய்ய வேண்டியிருக்கும்.

 

பல அடிப்படை காரணங்களைக் கருத்தில் கொண்டு, யோனி இறுக்கத்தை எதிர்கொள்வதென்பது உடல்ரீதியான தலையீடுகள் மற்றும் உளவியல் ஆதரவு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

 

உளவியல் சிகிச்சை, தம்பதிகளுக்கான சிகிச்சை மற்றும் பாலியல் சிகிச்சை ஆகிய அனைத்தும் பாலியல் நெருக்கத்தை மேம்படுத்துவதற்கும், உடலுறவைச் சுற்றியுள்ள பதட்டம் மற்றும் பயத்தைத் தணிப்பதற்கும் மிகவும் உதவியாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது, இதன் மூலம் யோனி இறுக்கம் காரணமாக ஏற்படும் அறிகுறிகளை கண்டறியவும் உதவியாகவுள்ளது.

 

இடுப்புத்தள சிகிச்சையானது யோனியைச் சுற்றியுள்ள தசைகள் மீதான கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது, இதன் மூலம் யோனி தசைச்சுருக்கத்தை மேம்படுத்துகிறது. உணர்வு நீக்கி கிரீம்கள் மற்றும் வறட்சியை இல்லாதாக்கும் பதார்த்தங்கள்(lubricants) போன்ற எளிய சிகிச்சைகள் வீட்டில் பயன்படுத்தப்படலாம். யோனியை திறக்கவும், தன்னிச்சையான சுருக்கங்களைக் குறைக்கவும் யோனி விரிவாக்கிகள் பயன்படுத்தப்படலாம்.

 

யோனி இறுக்கம் குணமடைய நீண்ட நேரம் எடுக்கும் அத்தோடு நோயாளிகள் தங்கள் சிகிச்சையில் உறுதியாக இருக்க வேண்டும். இது ஒரு சவாலான நிலையாக இருந்தாலும் உளவியல் ஆதரவு மற்றும் மருத்துவ தலையீடு மூலம் இதற்கு திறம்பட சிகிச்சையளிக்க முடியும். இந்நிலைப்பாடு பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் அதிகரிப்பதன் மூலம், பெரும்பாலான தனிநபர்கள் தங்கள் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான கவலைகளுக்கு உதவி பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.

 

எழுத்தாக்கம் 

ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கம்

 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By